Tuesday, January 4, 2011

கவனிக்கப்படாத இசை(யமைப்பாளர்கள்)

            தமிழ் சினிமாவை ஆட்சி செய்த இசையமைப்பாளர்களில் முடிசூடா மன்னர்கள் என்று இருவரை
குறிப்பிடலாம். எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா அவர்கள். இவர்கள் காலகட்டத்தில் வெளியான
பாடல்களும், இசையும் தமிழ்ஹ் மக்களை சென்றடைவது எளிதான காரியம் இல்லை என்றாலும் இவர்களுடைய
பாடல் இசை எளிமையானதாகவும் மனதில் பதியகூடியாதாகவும் இருந்ததால் இவர்கள் இருவரும் தவிர்க்கமுடியாமல்
மக்களைச்சென்றடைந்தார்கள். ஆனால் இன்று இசையமைப்பாளர்களுக்குக்கூட விளம்பரம் தேவைப்படுகிறது.

          சரி விஷயதிற்க்கு வருவோம். சமீபகாலங்களாக நல்ல பாடல்இசை மற்றும் பின்னணி இசையமைத்தும்
பிரபலமடையாத இசையமைப்பாளர்களைப்ப்ற்றி பார்ப்போம்.

கார்த்திக் ராஜா


          இவர் இளையராஜாவின் வாரிசு என்றாலும் இவருடைய இசையில் தனித்தன்மை இருக்கத்தான் செய்தது. இவர் அறிமுகமான உல்லாசம் திரைப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் மிகச்சிறப்பாகவே இருந்தது. அதில்
‘வீசும் காற்றுக்கு’, ‘முத்தே முத்தம்மா’ மற்றும் ‘யாரோ யார் யாரோ’ ஆகிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை. ‘வீசும் காற்றுக்கு’ பாடலை கேட்கும்பொழுது உங்கள் மீது இதமான தென்றல் காற்று வீசும். இதேபோல் இவர் இசையில்
வெளியான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ திரைபடத்தில் இடம்பெற்ற ஹரிஹரன்-பவதாரனி குரலில் ஒலிக்கும் ‘இந்த சிரிப்பினை’ பாடல் இதயத்தை வருடிச்செல்லும் மெல்லிசை. இதே படத்தில் இடம்பெற்ற மற்ற பாடல்கள் அனைத்தும் கலக்கல் பாடல்கள் உ.ம்.(‘கட்டான பொண்ணே’, ‘ஐலசா ஐலசா’).
               இவர் ‘காதலா காதலா’, ‘உள்ளம் கொள்ளை போகுதே’, ‘ரகசியமாய்’ போன்ற படங்களுக்கு தன்னுடைய
சிறப்பான இசையை கொடுத்திருந்தாலும், குப்பையான படங்களுக்கு இசையமைத்ததன் காரணத்தால் இவர் வெளிப்படாமலேயே இருக்கின்றார். ‘ரகசியமாய்’ படத்தில் இடம்பெற்ற ‘ஓடுதே ஓடுதே’ பாடல் ஆன்மாவை வருடும் மெல்லிசை. இதேபோல் சமீபத்தில் இவர் இசையில் வெளியான ‘ரெட்டைச்சுழி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பற பற கிளி’ ம்ற்றும் ‘நான் என்ற சொல்’ என்ற பாடல்கள் மிகச்சிறப்பாகவே இருந்தன. குறிப்பாக ‘நான் என்ற சொல்’ என்ற பாடலின் வரிகள்(எழுதியவர் சந்திரா) பிரமாதம். இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் வலம்வர காத்திருக்கிறேன்.

தரண்



           இவர் தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளம் வயது இசையமைப்பாளர். இவர் இயக்குநர் பாக்யராஜின் ‘பாரிஜாதம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தன் முதல் திரைப்படத்திலேயே மிகச்சிறந்த மெல்லிசையை கொடுத்தவர்(‘உன்னைக் கண்டேனே’). தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த பாடல்களில் இதுவும் ஒன்று. ஏனோ
அவருடைய அடுத்தடுத்து வெளியான ‘லாடம்’, ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘சித்து’ போன்ற படங்களில் வெளியான சில பாடல்களை ரசிகர்கள் தவரவிட்டுவிட்டனர் என்றே சொல்வேன். (லாடம்- ‘சிறு தொடுதலிலே’, தம்பிக்கு இந்த ஊரு- ‘முதல் பெண் நீயே’, சித்து- ‘பூவே பூவே’).

தமன்


           மற்றொரு இளம் இசையமைப்பாளர். இவர் ‘பாய்ஸ்’ படத்தில் டிரம்மராக நடித்தவர். இவர் இசையமத்த ‘ஈரம்’ படமும் இவருடைய பின்னணி இசையும் பிரம்மிப்பை ஏற்படுத்தியது உண்மை. இப்படத்தில் இடம்பெற்ற ‘மழையே மழையே’, ‘தரை இறங்கிய’ போன்ற பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருந்தது. பிறகு இவர் இசையமைத்த ‘முன்தினம் பார்த்தேனே’, ‘சிந்தனை செய்’ படங்களில் பாடல்கள் சிறப்பானதாக இருந்தும் இன்னும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறார். சமீபத்தில் இவர் இசையில் வெளிவந்த ‘அய்யனார்’ திரைப்படதில் இடம்பெற்ற
‘பனியே பனியே’, ‘மயங்குரேன்டி’ கேட்க இனிமையானதாகவே இருந்தது.

சதீஷ் சக்கரவர்த்தி


            இவர் தமிழ் சினிமாவின் அடுத்த புது வரவு. இவர் அறிமுகமான ‘லீலை’ திரைப்படதின் பாடல்கள் வெளியாகி ஒரு வருடதிற்கு மேலாகியும் ஏனோ இன்னும் படம் வெளிவரவில்லை. இத்திரைப்படத்தின் பாடல்களில்
குறிப்பிடத்தக்க மிக முக்கியமான இரண்டு பாடல்கள் உள்ளன. ஸ்ரேயா கோஸல்- சதீஷ் சக்கரவர்த்தி பாடிய ‘ஒரு கிளி ஒரு கிளி’ மற்றும் சதீஷ் சக்கரவர்த்தி பாடிய ‘ஜில்லென்று ஒரு கலவரம்’. இந்த ஆல்பத்தின் மிக்ச்சிற்ந்த மெல்லிசைப் பாடலாக ‘ஒரு கிளி ஒரு கிளி’  பாடலை குறிப்பிடலாம். இந்த பாடலை கேட்கும்பொழுது ஆகாயத்தில் பறக்கும்
உணர்வை ஏற்படுத்தியது. இவரின் சமீபத்திய படைப்பு ‘கனிமொழி’ இந்த ஆல்பத்தில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம். கிளிண்டன் பாடிய ‘தட தடவென்று’ பாடல் ராப் இசை விருந்து. விஜய் யேசுதாஸ் பாடிய ‘முழு மதி’ பாடல் மென்மெலடி. முகேஷ்- பெலா ஷிண்டே பாடிய ‘யாரோ இவள்’ பாடல் உற்ச்சாக மெலடி. இவர் தமிழ் சினிமாவில் வலம்
வர வாய்ப்புள்ளது.

             இந்த பாடல்களை கேட்கத்தவறியவர்கள் வாழ்க்கையின் உண்ணதமான சில மணிநேரங்களை தவறவிட்டவர்கள் என்றே சொல்வேன். இனி கேட்க வாய்ப்புள்ளவர்கள் கேட்டு ஆனந்தம் அடைய வாழ்த்துகிறேன்.

             இளையராஜா,ஏ.ஆர்.ரஹ்மான்,யுவன் ஷங்கர் ராஜா,ஹாரிஸ் ஜெயராஜ்,வித்யாசாகர் இவர்களின் இசையின் தனித்தன்மையையும், விளம்பரத்தால் பிரபலமாக்க முயற்ச்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு இளம் இசையமைப்பாளர் பற்றியும் மற்றொரு பதிவில் பகிர்கிறேன்.

அன்புடன்
ஜேம்ஸ்

Thursday, December 30, 2010

வாடிவாசல்(1959)

                எனக்கு புத்தக மதிப்புரை எழுத தகுதி இல்லை என்றாலும் நான் படித்ததில் மிகவும் என்னை உணர்ச்சிவசப்படவைத்த புத்தகம் என்பதால் எழுதுகிறேன்.
              
                சி.சு.செல்லப்பா(1912- 1998) பிறந்தது மதுரை மாவட்டம் வத்தலகுண்டு. இவர் சிறுகதை,நாவல்,கவிதை,விமர்சனம் ஆகிய துறைகளில் சிறந்து இயங்கியவர்.

                இந்த குறுநாவலை நீங்கள் படிக்கும்பொழுது உங்களை அறியாமல் உங்கள் மனதிற்குள் கைதட்டிக்கொள்வீர்கள். ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் காளைகளை வெளியே அவிழ்த்துவிடும் இடத்திற்கு பெயர்தான் 'வாடிவாசல்' (கிட்டி).

                ஜல்லிக்கட்டு பற்றி தமிழில் வெளிவந்த முதல் படைப்பு வாடிவாசல் ஆகும்.இந்த நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் உங்கள் மனதில் நிற்பது உறுதி.காளை முதற்கொண்டு. நீங்கள் இந்த நாவலை படித்து முடித்த பிறகு நாற்பது வருடங்களுக்கு முன் எழுதியதா? என்று வியக்குமளவிற்கு மிகச்சிறப்பாக இருக்கும். ஒரு ஜல்லிக்கட்டு நடக்கும் விதத்தை  இவ்வளவு நேர்த்தியாக யாரும்
எழுதிவிட முடியாது. பல இடங்களில் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த நாவலின் முடிவில் நீங்கள் நிச்சயமாக ஆனந்தம் அடைவீர்கள்.

அன்புடன்
ஜேம்ஸ்

Tuesday, December 28, 2010

அறிமுகம்

வணக்கம் தோழர்களே,
                               பெயர் ஜேம்ஸ், நான் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். நான் இந்த வலைப்பூவை துவங்கியதற்கு காரணம், தமிழில் கணக்கிலட்ங்கா வலைப்பூக்கள் உள்ளன. பொழுதுபோக்கு, விமர்சனக்கட்டுரை, அறிவியல், சமூக சிந்தனை, இலக்கியம், சினிமா, விளையாட்டு இன்னும் ஏராளம். இதில் நான் என்ன எழுதுவது? ஆனாலும் என் சிந்தனைக்கும், புத்திக்கும் எட்டியதை இங்கு பதிவு செய்ய விறும்புகிறேன். என்னுடைய இந்த வலைப்பூவை நான் உருவாக்க உந்துதலாய் இருந்தது, நான் படித்த படித்துகொண்டிருக்கிற நூல்களும், வலைப்பூக்களுமே. அனைத்து எழுத்தாளர்களுக்கும், வலைப்பூ பதிவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
                               அடுத்த பதிவில் என் கருத்துகளோடு உங்களை சந்திக்கிறேன்.